Colombo (News 1st) மேல் மாகாண ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் பாடசாலையின் மாணவர்களுக்கு பணம் அறவிட்டு மேலதிக வகுப்புகளை நடத்த தடை விதித்து சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
மேல் மாகாண கல்வி செயலாளர் கே.ஏ.டீ.ஆர்.நிஷாந்தி ஜயசிங்கவின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கை மேல் மாகாண பணிப்பாளர், வலயக்கல்வி பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி பணிப்பாளர்கள் மற்றும் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பாடசாலை நேரங்களிலும் அதற்கு பின்னரும் அல்லது வார இறுதி நாட்கள் உள்ளிட்ட அரச விடுமுறை தினங்களிலும் கூட இவ்வாறு பணம் அறிவிட்டு மேலதிக வகுப்புகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் சில ஆசிரியர்கள் தாம் கடமையாற்றும் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வௌியிடங்களில் பணம் அறவிட்டு மேலதிக வகுப்புகளை நடத்துவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மேல் மாகாண கல்வி செயலாளர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் பணம் அறிவிட்டு மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையை அனைத்து ஆசிரியர்களுக்கும் அறிவித்து அவர்கள் அது தொடர்பான தௌிவை பெற்றிருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திய ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனவும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனையை கவனத்தில் கொள்ளாது செயற்படும் ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
பணம் அறிவிட்டு மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு சப்ரகமுவ மாகாணத்திலேயே முதலாவதாக தடை விதிக்கப்பட்டது.
அதற்கு பின்னர் மத்திய மாகாணத்திலும் இந்த தடை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.