Colombo (News 1st) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் பதவிக்காக இனிமேல் போட்டியிடப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இன்று(16) அறிவித்துள்ளார்.
தற்போதைய தவிசாளர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பொதுச் செயலாளர் தொடர்பில் தமக்கு ஆட்சேபனை இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது சட்டத்தரணியின் ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று அழைக்கப்பட்டு இணக்கப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரான மொன்டேகு சரத்சந்திர என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக செயற்படுவதைத் தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் அந்த பதவியில் செயற்படுவதன் ஊடாக நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக மனுதாரரான மொன்டேகு சரத்சந்திர தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர், நீதிபதி நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதிபதி பீ.ஷஷீ மகேந்திரன் ஆகியோர் அங்கம் வகித்த நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன, தமது சேவைபெறுநரின் இணக்கப்பாட்டை நீதிமன்றுக்கு அறிவித்ததுடன் மனுவை இணக்கப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான இயலுமை காணப்படுவதாக குறிப்பிட்டார்.
தமது சேவைபெறுநரும் இதற்கு இணங்குவதாக மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி ஷாந்த ஜயவர்தன இதன்போது நீதிமன்றில் தெரிவித்தார்.
இந்த விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம் மனுவை இணக்கப்பாட்டுக்கு கொண்டுவந்து மனுவை மீளப்பெற்றுக் கொள்வதற்கு மனுதாரர் தரப்பிற்கு அனுமதி வழங்கியது.