Colombo (News1st) அரசாங்கத்தினால் பிரபுக்கள் பாதுகாப்பிற்காக அதிகாரிகளை ஈடுபடுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்க நியமிக்கப்பட்டுள்ள குழு முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கைகள் மற்றும் பொலிஸாருக்கான செலவுகள் தொடர்பில் மீளாய்வு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளிள் வருடாந்த செலவு 1100 மில்லியன் ரூபாவென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பிற்காக வருடாந்தம் 326 மில்லியன் ரூபாவுக்கு மேல் செலவாவதாக பொலிஸ் ஊடகப்பிரிவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை 60 ஆக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தவிர இடைக்கிடையே குழு கூடி, மதிப்பீட்டு அறிக்கைகளைப் பெற்று அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அல்லது அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக இராணுவ உறுப்பினர்களை ஈடுபடுத்தியுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை பொலிஸில் பொதுவான பொலிஸ் கடமைகளுக்காக ஏற்கனவே 24,000 அதிகாரிகளின் பற்றாக்குறை நிலவுவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரபுப் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்படும் அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைப்பதனூடாக குற்றங்களை ஒழித்தல் உள்ளிட்ட ஏனைய பணிகளுக்கு பொலிஸ் அதிகாரிகளை ஈடுபடுத்த முடியும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக இராணுவ அதிகாரிகளை ஈடுபடுத்தியுள்ளதாகவும் அவரது பாதுகாப்பிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படவில்லை எனவும் பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவ அதிகாரிகள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் கூறியுள்ளது.