சபாநாயகர் பதவியை அசோக ரன்வல இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக எதிர்வரும் 17 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்யவுள்ளதாக பாராளுமன்றம் அறிவித்துள்ளது.
தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பதவிப்பிரமாணத்தின் பின்னர் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதி சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதன் பின்னர் அசோக ரன்வல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தமை தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் சபையில் சமர்பிக்கப்படவுள்ளது.
பின்னர் அரசியலமைப்பிற்கு அமைவாக புதிய சபாநாயகர் தெரிவு இடம்பெறும்.
எதிர்வரும் 17 ஆம் 18 ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கூடவுள்ளதும் நினைவுகூரத்தக்கது.
இதேவேளை, சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக அசோக ரன்வல அனுப்பிய இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலாளரினால் இந்த விடயம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.