Colombo (News 1st) கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
சட்டவரைஞர் திணைக்களத்தால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர்,பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டுடன் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்தது.
அதற்கமைய, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
குறித்த திருத்தங்கள் சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைத்ததன் பின்னர், எதிர்வரும் வாரங்களில் பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டின் பின்னர் புதிதாக சேர்க்கப்பட்ட 10 இலட்சம் புதிய வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதும் வேட்புமனுவை இரத்து செய்வதற்கான முக்கிய காரணியாகும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.