Colombo (News 1st) சர்வதேச அரசியல் நாளுக்கு நாள் புதுப்பிக்கப்படுகின்றது.
உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள புதிய போக்கினால் ஆட்சியில் உள்ள அரசாங்கங்களும் ஆட்சியாளர்களும் விரட்டியடிக்கப்படுகின்றனர்.
சிரியாவில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக 54 ஆண்டுகள் நீடித்த அசாத் குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்தது.
சிரியாவின் தலைநகரான டமஸ்கஸுக்குள் கிளர்ச்சியாளர்கள் நுழைந்ததும் அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல் அசாத் தனி விமானத்தில் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றார்.
சிரியாவில் நடந்தது என்ன?
சிரியாவின் தலைநகரான டமஸ்கஸில் கிளர்ச்சியாளர்கள் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து, சிரிய அதிபர் பஷார் அல்-அசாத் நாட்டை விட்டு தப்பிச்சென்றார்.
சிரிய ஜனாதிபதி டமஸ்கஸில் இருந்து இதுவரை வௌிப்படுத்தப்படாத ஒரு இடத்திற்கு சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் டமஸ்கஸிற்கு அருகிலுள்ள ஹோம்ஸ் நகரை நேற்று தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த கிளர்ச்சியாளர்கள் பின்னர் தலைநகரில் அதிகாரத்தைக் கைப்பற்றறினர்.
இதனையடுத்தே ஜனாதிபதி பஷார் அல் அசாத் தப்பியோடியுள்ளார்.
டமஸ்கஸ் தற்போது அசாத்திடம் இருந்து விடுதலையாகியுள்ளது என கிளர்ச்சியாளர்கள் சிரிய இராணுவ அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆட்சியை சிரிய கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து டமஸ்கஸ் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்
அசாத் ஆட்சியில் டமஸ்கஸ் அருகே உள்ள ஒரு பாரிய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கைதிகளையும் விடுவிக்க கிளர்ச்சியாளர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
சிரிய அரசாங்கத்தினை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும், சிரிய மக்கள் தேர்ந்தெடுக்கும் எந்தத் தலைமைக்கும் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் சிரியாவின் பிரதமர் முகமது காசி அல்-ஜலாலி தெரிவித்துள்ளார்.
சிரியாவுக்கு ஆதரவாக செயற்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பும் அசாத் தப்பிச் சென்றதன் மூலம் பின்வாங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
---
என்ன நடந்தது?
சிரியாவின் குடும்ப ஆட்சி வரலாறு
கடந்த 54 ஆண்டுகள் சிரியா அசாத் ஆட்சியின் கீழ் காணப்பட்டது.1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஹபீஸ் அல் ஆசாத் 2000 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். அவரது இரண்டாவது மகன் பசெல் அல்-அசாத் திடீர் விபத்தில் உயிரிழந்ததன் பின்னர் இளைய மகன் பஷர் அல்-அசாத் பொறுப்பேற்றார்.
பஷார் அல்-அசாத் ஆட்சிக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி பாரியளவிலான போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் துனிசியாவில் ஆரம்பமாகி அரபு நாடுகள் முழுவதும் வியாபித்த அரபு வசந்தம் போராட்டங்களின் தொடர்ச்சியாக இது அமைந்தது.
முதலில் சிறியளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போது பாதுகாப்புப் பிரிவினர் பிரயோகித்த அடக்குமுறை காரணமாக ஆயுதப் போராட்டமாக அது வலுவடைந்தது.
ஆயுதக் குழுக்களுக்கு வெளிநாட்டு உதவிகள் கிடைத்ததால் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு குழுக்கள் எழுச்சிபெற்றன.
சிரியாவின் வடக்குப் பகுதியில் வாழ்ந்த குர்தி பிரஜைகள் மக்கள் பாதுகாப்புப் பிரிவு எனும் அமைப்பை ஸ்தாபித்தனர்.
சுதந்திர சிரியா இராணுவத்திலும் பல்வேறு பிரிவுகள் காணப்பட்டன.
-----
இதனை தவிர துருக்கியின் ஆதரவுடன் போராட்ட அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள் போன்ற பல்வேறு குழுக்கள் உருவாக்கப்பட்டன.
YPG அமைப்பின் தலைமையில் சிரிய ஜனநாயகப் படையணி (SDF) நிறுவப்பட்டமை இதன் முக்கியமான கட்டமாகும்.
ஜனாதிபதி பஷார் அல்-அசாத் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவின் ஆதரவைப் பெற்றார்.
2013ல் சிரியாவின் ரக்கா பகுதியை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கைப்பற்றினர்.
2014 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கிழக்கு சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றிய அவர்கள் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெருமளவிலான பகுதியை தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தனர்.
இதன் மூலம் சிரியாவில் தமது அதிகாரத்தை அவர்கள் தொடர்ச்சியாக விரிவுப்படுத்தினர்.
மேலும், "இஸ்லாமிய அரசை" உருவாக்குவதாக கூறி, பிற நாடுகளில் இருந்து கடும்போக்குவாதிகளை சிரியாவிற்குள் கொண்டு வர ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு செயல்பட்டது.
பஷார் அல்-அசாத்தின் ஆட்சிக்கு ரஷ்யா தொடர்ந்து ஆதரவளித்து வந்தது.
2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி
ரஷ்யா விமானப்படைகளை அனுப்பியதன் மூலம் யுத்தத்தில் இணைந்தது.
வரலாற்றுச் சிறப்புமிக்க பல்மைரா நகரம் 2015 மே மாதம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு வசமானது.
இதேவேளை அமெரிக்கா ஆதரவான குர்தி YGP அமைப்பு தலைமையிலான SDF அமைப்பினரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மீது தாக்குதல் நடத்தினர்.
2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ரபா நகரை கைப்பாற்றினர்.
2018 ஆம் ஆண்டில் ISIS அமைப்பிற்கு சொந்தமான அனைத்து பகுதிகளும் SDF அல்லது சிரியப் படைகள் கைப்பற்றின.
2019 ஆம் ஆண்டு அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த ISISயின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியின் மரணம் சிரியப் போரில் ஒரு முக்கியமான தருணமாகும்.
தற்போது சிரியாவின் அதிகாரத்தை கைப்பற்றிய அணி என்ன?
ஜிஹாதி கிளர்ச்சிக் குழு (HTS)
கடந்த வாரம் அலெப்போவின் வடக்கு நகரில் யுதத்தை ஆரம்பித்த இந்த குழுவினர் தற்போது தலைநகரைக் கைப்பற்றியுள்ள்ளனர்.
துருக்கியின் ஆதரவுடன் சிரிய தேசிய இராணுவத்தின் கீழ் உள்ள கிளர்ச்சியாளர்களும் உள்ளடங்கியிருந்ததுடன் ஜிஹாதி குழுவான ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் குழுவினால் தாக்குதல்கள் வழிநடத்தப்பட்டன.
அல்கொய்தாவின் பயங்கரவாதக் குழுக்களில் ஒன்றான நுஸ்ரா முன்னணி என்று அழைக்கப்பட்ட HTS இல் சுமார் 30,000 போராளிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அமைப்பு அபு முஹம்மத் அல்-கோலானியால் சிரிய அரசாங்கத்தை எதிர்ப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்டது.
நேற்று ஆட்சி கைப்பற்றப்பட்ட பின்னர் சிறுபான்மை மக்களுடன் மோதலில் ஈடுபடப்போவதில்லை என கிளர்ச்சித் தலைவர் கோலானி தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்தை குறிவைத்து வெளிநாடுகள் மீது தாக்குதல் நடத்துவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் அடுத்து என்ன நடக்கும்?
சிரிய மக்கள் தெரிவு செய்யும் எந்தவொரு தலைமையுடனும் ஒத்துழைக்கத் தயார் என சிரிய பிரதமர் மொஹமட் அல் ஜலாலி தெரிவித்துள்ளார்.
கொடூரமான அசாத் ஆட்சியில் இருந்து விடுவிக்கப்பட்ட மகிழ்ச்சியில் மக்கள் வீதியில் இறங்கி கொண்டாடியதை சர்வதேச ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
சிரியாவின் இந்த நிலை உள்நாட்டு பிரச்சினை மாத்திரமல்ல
சிரியா ஒரு பூகோள அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும்
ஈரான், ஈராக், இஸ்ரேல், ரஷ்யா போன்ற நாடுகள் சிரியாவைச் சூழ்ந்துள்ளன.
கடந்த காலங்களில் சிரிய ஜனாதிபதிக்கு ஆதரவாக இருந்த மூன்று தரப்பினர் நெருக்கடிகளில் சிக்கியுள்ளனர்
ஈரான் ,ஹிஸ்புல்லாஹ் மற்றும் ரஷ்யா ஆகிய தரப்பினரே சிரிய ஜனாதிபதிக்கு ஆதரவாக செயற்பட்டிருந்தன.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் தற்போது போர் இடம்பெற்று வருவதுடன் மேலும் யுக்ரைன் மற்றும் ரஷ்யாவும் போரில் ஈடுபடுகின்றன.
இப்போது ஹிஸ்புல்லாஹ் போராளிகள் இஸ்ரேலால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக துருக்கி ஆதரவளிக்கும் ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் குழுவினால் சிரியாவின் பல முக்கிய நகரங்களின் கட்டுப்பாட்டை குறுகிய காலத்திற்குள் கொண்டு வர முடிந்தது.
பூகோள அரசியலைப் போலவே, இதிலிருந்து ஒரு முக்கியமான விடயம் தெளிவாகிறது.
சர்வதிகார மக்கள் விரோத குடும்ப ஆட்சிகளுக்கு மக்கள் எதிர்ப்பினை தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாய ராஜபக்ச மக்களின் நிராயுத போராட்டத்தினால் விரட்டப்பட்டார்.
அதன்பின்னர் பங்களாதேஷ் பிரதமருக்கும் மக்கள் அவ்வாறே பதிலளித்தனர்.
சிரியா ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் சுமார் 600,000 சிரிய பிரஜைகள் உயிரிழந்துள்ளனர்.
எனவே இம்முறையும் அடக்குமுறை எதிராகவே பொதுமக்கள் அணி திரண்டுள்ளனர்.