Colombo (News 1st) வௌ்ளத்தால் சேதமடைந்த வயல் நிலங்கள் தொடர்பான மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
25 மாவட்டங்களையும் உள்ளடக்கி இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சபை கூறியுள்ளது.
வௌ்ள நீர் வடிந்த பின்னர் பயிர்ச்சேதங்கள் தொடர்பான மதிப்பீடுகளை நாளை(02) ஆரம்பிக்கவுள்ளதாக சபையின் தலைவர் பிரேமசிறி ஜாசிங்கஆரச்சி தெரிவித்தார்.
அதிகளவிலான பயிர்ச்சேதம் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நாடளாவிய ரீதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விவசாய நிலங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, வௌ்ளத்தால் அழிவடைந்த நெல், சோளம், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், மிளகாய், சோயா செய்கைகளுக்கு ஒரு ஏக்கருக்கு 40,000 ரூபாவிற்கு உட்பட்டு நட்டஈடு வழங்கப்படும் என விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
இதற்காக அரசாங்கத்தால் 1,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.
பலத்த மழையுடனான வானிலை காரணமாக 390,000 ஏக்கர் வரையான வயல்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.