Colombo (News 1st) மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பரப்பப்படும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை நிராகரிப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
கட்டணத் திருத்த யோசனை எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படும் எனவும் மின்சார சபை அறிக்கையூடாக தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள முறைமைக்கு அமைவாக, 6 முதல் 11 வீதம் வரையிலான மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு மின்சார சபையால் முன்வைக்கப்பட்ட யோசனையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
இந்த வருடத்தின் இறுதி காலாண்டில் மதிப்பிடப்பட்ட செலவுகள், இரண்டாம், மூன்றாம் காலாண்டுகளின் வருமானங்கள் மற்றும் 2014 - 2022 காலப்பகுதியில் பெறப்பட்ட கடன் கொடுப்பனவுகளை கருத்திற்கொண்டு குறித்த பிரேரணை தயாரிக்கப்பட்டதாக மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 2024 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டிற்கு அல்லாது 2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கான கட்டணத் திருத்த முன்மொழிவை அனுப்புமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியிருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டின் முதல் 3 காலாண்டுகளின் முறைமையை மாற்றுவதற்கு ஆணைக்குழுவின் அதிகாரிகள் எடுத்த தீர்மானத்தால் இவ்வாண்டின் இறுதி காலாண்டில் கட்டணத்தைக் குறைப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என மின்சார சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்சார சபையால் அனுமதி வழங்கப்பட்ட போதிலும், அதற்கேற்றவாறு மின் கட்டணத்தை திருத்துவதற்கு ஆணைக்குழுவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமையினாலேயே 2014 - 2022 காலப்பகுதியில் கடனை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் குறித்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.