Colombo (News 1st) நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிராந்தியங்கள் மற்றும் தரைப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று(25) மாலை 4 மணி முதல் நாளை(25) மாலை 4 மணி வரையான 24 மணித்தியாலங்களுக்கு குறித்த எச்சரிக்கை அமுலில் இருக்குமென திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று(25) காலை மத்திய தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
குறித்த வளிமண்டல கட்டமைப்பு இன்று(25) காலை 11.30 அளவில் திருகோணமலையில் இருந்து 530 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்தது.
எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் வடமேல் திசையில் பயணித்து ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நாட்டின் கிழக்கு கடலை அண்மித்து செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதனிடையே, வட மாகாணத்தின் சில இடங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வடமத்திய, மத்திய, ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீட்டர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் கூறியுள்ளது.