அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்க நடவடிக்கை

சர்ச்சையை ஏற்படுத்திய புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்க நடவடிக்கை - கல்வி அமைச்சு

by Staff Writer 25-11-2024 | 2:26 PM

Colombo (News 1st) புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்வரும் 2ஆம் திகதி உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வினாத்தாளின் சில வினாக்கள் கசிந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த 3 குழுக்களால் வழங்கப்பட்ட பரிந்துரைகளும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

குறித்த விடயங்களை கருத்திற்கொண்டு எடுக்கப்படும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சட்ட மாஅதிபரின் ஊடாக உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 15ஆம் திகதி இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் மற்றும் பெறுபேறுகளை வௌியிடுதல் ஆகியவற்றுக்கு தடை விதித்து உயர் நீதிமன்றத்தால் கடந்த 18ஆம் திகதி இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 4 அடிப்படை உரிமை மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ப்ரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி, மஹிந்த சமயவர்தன உள்ளிட்ட நீதியரசர்கள் குழாத்தினால் குறித்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன.

இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பித்த நீதியரசர்கள் குழாம், புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளை இரத்துச் செய்து அதனை மீள நடத்துவதற்கு காணப்படும் இயலுமை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளிடம் காரணங்களை வினவி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு பிரதிவாதிகள் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்னவிற்கு அறிவித்தது.

பரீட்சார்த்திகளுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.

அதன்காரணமாக தமது சேவைபெறுநர்கள் மனுவில் கோரியுள்ள நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென சட்டத்தரணிகள் மன்றில் குறிப்பிட்டனர்.