Colombo (News 1st) முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
குலசிங்கம் திலீபன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் கடந்த 11 வருடங்களாக வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவாகி முடிந்தளவு சேவையை வழங்கியதுடன் நடந்துமுடிந்த பாராளுமன்றத் தேர்தலில் கட்சி சார்பாக போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றிருந்ததாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், சில விடயங்கள் காரணமாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிலிருந்து வௌியேற தீர்மானித்துள்ளதாகவும் இதற்கு கட்சியோ அல்லது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவோ காரணம் இல்லை எனவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.