லொஹான், அவரது மனைவியின் விளக்கமறியல் நீடிப்பு

லொஹான் ரத்வத்தே மற்றும் அவரது மனைவி ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நீடிப்பு

by Staff Writer 18-11-2024 | 10:07 PM

Colombo (News 1st) முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மற்றும் அவரது மனைவி சஷி பிரபா குணவர்தன ஆகியோர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக ஒருங்கிணைக்கப்பட்ட காரை பயன்படுத்திய குற்றச்சாட்டிற்காகவே இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

லொஹான் ரத்வத்தேயின் மனைவிக்கு சொந்தமான மிரிஹானையிலுள்ள வீட்டிலிருந்து இலக்கத் தகடுகளற்ற அதிசொகுசு கார் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

மிரிஹானை பொலிஸாரால் இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த கார் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டதென்பது கண்டறியப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கடந்த மாதம் 30ஆம் திகதி கட்டுகஸ்தோட்டை பகுதியில் லொஹான் ரத்வத்தே கைது செய்யப்பட்டதுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

குறித்த கார் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக லொஹான் ரத்வத்தேயின் மனைவி கடந்த 4ஆம் திகதி நுகேகொட நீதவான் முன்னிலையில் ஆஜராகியிருந்ததுடன் இதன்போது அவர் கைது செய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.