தேசிய மக்கள் சக்தியின் புதிய அமைச்சரவை

ஜனாதிபதி அனுர குமார அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை

by Rajalingam Thrisanno 18-11-2024 | 11:38 AM

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டது. 

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். 

விஜித ஹேரத் வௌிவிவகாரம், வௌிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா அமைச்சராகவும் பேராசிரியர் சந்தன அபேரத்ன, பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்தனர்.

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக கே.டி லால்காந்த நியமனம் பெற்றார். 

சரோஜா சாவித்ரி போல்ராஜ் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராகவும் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார - நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சராகவும்  நியமிக்கப்பட்டுள்ளனர். 

இராமலிங்கம் சந்திரசேகரன் கடற்றொழில், நீரியல் வள மற்றும் கடல் வளங்கள் அமைச்சராகவும் நகர அபிவிருத்தி, நிர்மாணம்  மற்றும் வீடமைப்பு அமைச்சராக அனுர கருணாதிலக்கவும் பதவியேற்றனர். 

சுனில் ஹந்துன்நெத்தி கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சராகவும் பேராசிரியர் உபாலி பன்னிலகே, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு, சமூக வலுவூட்டல் அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்தனர். 

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சராக ஆனந்த விஜேபாலவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக பிமல் ரத்நாயக்கவும் தெரிவுசெய்யப்பட்டனர். 

பேராசிரியர் ஹினிந்தும சுனில் செனவி புத்த சாசனங்கள், சமய மற்றும் கலாசார விவகார அமைச்சராகவும் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ சுகாதார மற்றும் ஊடக அமைச்சராகவும் நியமனம் பெற்றனர். 

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சராக சமந்த வித்யாரத்னவும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக சுனில் குமார கமகேவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

வசந்த சமரசிங்க வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராகவும் பேராசிரியர் கிருஷாந்த அபேசேன விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகவும் பதவியேற்றனர். 

பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தொழில் அமைச்சராகவும் பொறியிலாளரான குமார ஜயகொடி வலுசக்தி அமைச்சராகவும் டொக்டர் தம்மிக பட்பெதி சுற்றாடல் அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.