சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்த விடயம்

பாராளுமன்றத் தேர்தல் அமைதியாகவும் நியாயமாகவும் நடைபெற்று முடிந்தது -சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள்

by Staff Writer 17-11-2024 | 7:20 PM

Colombo (News 1st) 2024 பாராளுமன்றத் தேர்தல் அமைதியாகவும் நியாயமாகவும் நடைபெற்று முடிந்ததாக சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான தமது இறுதி அறிக்கையை சமர்பித்து சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பிற்கிணங்க நாட்டுக்கு வருகை தந்திருந்த 10 பேர் அடங்கிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழுவினால் குறித்த இறுதி அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்றதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.ஏ.எம்.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டார்.

UNFEL மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளின் இறுதி அறிக்கைகள் நாளை(18) தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படவுள்ளன.

10,000ற்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் இம்முறை பாராளுமன்றத் தேர்தலை கண்காணிக்கும் பணிகளில் ஈடுப்பட்டிருந்தனர்.

அவர்களில் 43 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் 3 பேரும், UNFEL கண்காணிப்பு அமைப்பில் இருந்து 30 பேரும் நாட்டிற்கு வருகை தந்திருந்தனர்.

அண்டை நாடுகளில் இருந்து 10 தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகை தந்திருந்தனர்.

10 அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 10,000 உள்ளூர் கண்காணிப்பாளர்கள் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் பங்கேற்றிருந்தனர்.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு எனப்படும் பெப்ரல் அமைப்பின் சார்பில் 5,000 தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

நடமாடும் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 8 அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.