Colombo (News 1st) வாக்களிப்பு நிலையங்கள் அமைந்துள்ள தூரத்திற்கு அமைய ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்குமாறு அனைத்து தனியார் சேவை வழங்குநர்களிடமும் தொழில் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு மற்றும் தொழிலாளர் திணைக்களம் ஆகியன ஏற்கனவே அறிவித்துள்ளதாக தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.ஆலோக பண்டார தெரிவித்துள்ளார்.
அதற்கமைய பணியிடத்திலிருந்து 40 கிலோமீட்டர் அல்லது அதற்கும் குறைவான தொலைவில் வாக்களிப்பு நிலையம் அமைந்திருந்தால் அரைநாள் விடுமுறையும் 40 முதல் 100 கிலோமீட்டர் தொலைவில் வாக்களிப்பு நிலையம் அமைந்திருந்தால் ஒருநாள் விடுமுறையும் அளிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடத்திலிருந்து வாக்களிப்பு நிலையத்திற்கு செல்ல 100 முதல் 150 கிலோமீட்டர் தூரம் காணப்படுமாயின் ஒன்றரை நாள் விடுமுறைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
150 கிலோமீட்டருக்கு அதிக தூரமாயின் 2 நாட்கள் விடுமுறைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என தொழில் அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுப்பு இழப்பின்றி ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.