Colombo (News 1st) அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்ந்து இடம்பெற்றுவருவதாகவும் அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர இன்று(13) மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குல் தொடர்பில் முன்னதாக தகவல் கிடைத்தும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் நிலந்த ஜயவர்தனவிற்கு எதிராக சமூக மற்றும் அமைதி நிலையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் மகேன் கோபல்லவ ஆகியோர் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மனு தொடர்பான விடயங்களை உறுதிப்படுத்த திகதியை வழங்குமாறு மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.
உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு அமைய தமது சேவை வழங்குநருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு வருவதாக நிலந்த ஜயவர்தன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மனுதாரர் கோரிய நிவாரணம் அவர்களுக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
விடயங்களை அராய்ந்த நீதிபதிகள் குழாம், பெப்ரவரி 27 ஆம் திகதி மனுவை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தது.
ஆட்சேபனைகள் இருப்பின் ஜனவரி 15ஆம் திகக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் பிரதிவாதிகளுக்கு நீதிபதிகள் அறிவித்தனர்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அறிவித்து, பல சிபார்சுகள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன் அது தொடர்பி்ல் பொலிஸ் மாஅதிபர் மற்றும் சட்ட மாதிபர் ஆகியேர் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம் நிலாந்த ஜயவர்தனவிற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.