இரண்டு கிராமங்களை பாலத்தால் இணைத்த கம்மெத்த

by Staff Writer 08-11-2024 | 3:04 PM

Colombo (News 1st) பதுளை ரிதீமாலியத்த கோலேயாயவையும் எல்தெனிய கிராமத்தையும் இணைக்கும் பாலம் இன்று(08) மக்களிடம் கையளிக்கப்பட்டது.

நாட்டு மக்களுக்கான சமூகப் பணிகளை முன்னெடுக்கும் கம்மெத்தவின் மற்றுமொரு மைல்கல்லாக இந்தப் பாலம் திகழ்கின்றது.

சிறு ஓடைக்கு குறுக்கேயுள்ள பதுளை ரிதீமாலியத்த கோலேயாயவையும் எல்தெனியவையும் இணைக்கும் இந்த வீதியூடாக பயணிக்கும் மக்கள் ஆண்டாண்டு காலமாக பாலம் இன்றி பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்துள்ளனர்.

எல்தெனிய கிராமத்தில் சுமார் 600 குடும்பங்கள் வாழ்வதுடன் அவர்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் குறித்த பாலத்தினூடாகவே நாளாந்தம் பாடசாலைக்கு செல்கின்றனர்.

மழைக் காலங்களில் ஓடை பெருக்கெடுப்பதால் இங்குள்ளவர்களின் நெருக்கடி நிலைமை மேலும் தீவிரமடைகின்றது.

இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தினூடாக இவர்களின் பிரச்சினையை கண்டறிந்த கம்மெத்த குழுவினர் கோலேயாயவையும் எல்தெனியவையும் இணைக்கும் பாலத்தை நிர்மாணிக்கத் தீர்மானித்தனர்.

இந்த திட்டத்திற்காக கடந்த ஜூன் மாதம் 8ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது.