விடுமுறைகள் வழங்கப்படாமை தொடர்பில் முறைப்பாடு

பொதுத் தேர்தலில் வாக்களிக்க விடுமுறைகள் வழங்கப்படாமை தொடர்பில் முறைப்பாடு

by Staff Writer 07-11-2024 | 9:12 AM

Colombo (News 1st) பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு போதுமான விடுமுறை பெற்றுக்கொடுக்கப்படவில்லை என முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

1981 ஆம் ஆண்டு முதலாமிலக்க தேர்தல் சட்டத்தின் 122 ஆவது சரத்திற்கு அமைவாக வாக்களிப்பதற்கு தமது ஊழியர்களுக்கு போதுமான விடுமுறையை வழங்க வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சம்பளம், தனிப்பட்ட விடுமுறை இழப்பின்றி ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு கடந்த 2ஆம் திகதி அறிவித்திருந்தது.

வாக்களிப்பதற்கு விடுமுறை வழங்குமாறு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் கட்டாயம் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விசேட விடுமுறையாக கருத வேண்டும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தலில் வாக்களிக்கச் செல்வதற்கு குறைந்தபட்சம் 4 மணித்தியாலங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் சம்பளத்தை குறைக்காது விசேட விடுமுறை வழங்கப்பட வேண்டும் எனவும் தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.

அலுவலகத்திலிருந்து வாக்குச்சாவடிக்கான தூரத்தை அடிப்படையாகக் கொண்டு, விடுமுறை வழங்கப்பட வேண்டிய காலம் தொடர்பில் நிறுவன தலைவர் தீர்மானம் எடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.