10 மாதங்களின் பின் மீள பயணிக்கும் யாழ் தேவி

10 மாதங்களின் பின் மீள பயணிக்கும் யாழ் தேவி

by Staff Writer 28-10-2024 | 3:22 PM

Colombo (News 1st) வடக்கு ரயில் மார்க்கத்தின் அனுராதபுரம் - மாகோ இடையிலான பகுதியில் ரயில் போக்குவரத்து இன்று(28) மீள ஆரம்பிக்கப்பட்டது.

வடக்கு ரயில் மார்க்கம் நவீனமயப்படுத்தப்பட்டு புனரமைக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதி திறக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் குறித்த புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதற்கமைய 10 மாதங்களுக்குப் பின்னர் யாழ் தேவி ரயில் இன்று(28) முதல் தனது பயணத்தை மீள ஆரம்பித்துள்ளது.

வடக்கு ரயில் மார்க்கத்தின் அனுராதபுரம் - மாகோ இடையிலான பகுதி போக்குவரத்திற்காக திறக்கப்பட்டமைக்கு அமைய யாழ் தேவி ரயில் யாழ்ப்பாணம் நோக்கி இன்று பயணத்தை ஆரம்பித்தது.

கொழும்பு கோட்டையில் இருந்து இன்று காலை பயணத்தை ஆரம்பித்த யாழ் தேவி ரயில், காலை 10 மணியளவில் அனுராதபுரம் ரயில் நிலையத்தை சென்றடைந்தது.

வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் நடவடிக்கையும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் ரயில்வே பிரதி போக்குவரத்து அத்தியட்சகர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்தார்.

வடக்கு ரயில் மார்க்கத்தில் இன்று முதல் நாளாந்த ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுவதால் ரயில் கடவைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ரயில்வே திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.