''செப்டம்பர் முதல் விசாரணை ஆரம்பம்''

''அறுகம்பை தாக்குதல் திட்டம் தொடர்பில் செப்டம்பர் முதல் விசாரணை ஆரம்பம்''

by Staff Writer 28-10-2024 | 10:33 PM

Colombo (News 1st) அறுகம்பை சுற்றுலா பிரதேசத்தில் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்திற்கமைய சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேனவிற்கு இன்று(28) அறிவிக்கப்பட்டது.

வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் தங்கியுள்ள சுற்றுலா வலயத்தை இலக்குவைத்து பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டமை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் குறித்த வழக்கு தொடர்பிலான விசேட நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகளை பின்பற்றுபவர்களாக மாறி குறித்த அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு தெரிந்தே இந்த நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளமையால், அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்காக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் தொடர்ந்தும் வாக்குமூலம் பெறப்பட வேண்டியுள்ளதாகவும் அதற்கு அனுமதி வழங்குமாறும் குறித்த விசேட நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்து விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

சம்பவம் தொடர்பில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் ஊடாக அடுத்தகட்ட விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் இதன் காரணமாக குறித்த அனுமதியை வழங்குமாறும் அவர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் முன்வைத்த விடயங்கள், விசேட அறிக்கையை ஆராய்ந்த மேலதிக நீதவான், விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் விரைவாக நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டு அடுத்தகட்ட விசாரணைகளை ஒத்திவைத்துள்ளார்.