ஆசிய வலைப்பந்தாட்ட தொடரில் சிங்கப்பூர் சாம்பியன்

ஆசிய கிண்ண வலைப்பந்தாட்ட தொடரில் சிங்கப்பூர் அணி சாம்பியனாகியது

by Staff Writer 27-10-2024 | 8:13 PM

Colombo (News 1st) ஆசிய கிண்ண வலைப்பந்தாட்ட தொடரில் 5ஆவது தடவையாக இலங்கை அணி இரண்டாமிடத்தை பெற்றுள்ளது.

இந்தியாவின் பெங்களூரில் இன்று(27) நடைபெற்ற 2024 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண வலைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் சிங்கப்பூர் அணிகள் மோதின.

ஆசியக் கிண்ண வரலாற்றில் இவ்விரு அணிகளும் 7ஆவது தடவையாக இறுதிப் போட்டியில் சந்தித்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் முன்னாள் வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் உள்ளிட்ட அதிகளவிலானவர்கள் போட்டியை காண வருகை தந்திருந்தனர்.

போட்டியின் ஆரம்பம் முதல் 2 அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வௌிப்படுத்தியிருந்தன.

போட்டியின் முதல் 2 சுற்றுகள் நிறைவில் 28 க்கு 27 என்ற புள்ளி அடிப்படையில் சிங்கப்பூர் முன்னிலையில் இருந்தது.

மூன்றாம் மற்றும் நான்காம் சுற்றுக்களில் இலங்கை வீராங்கனைகள் சிங்கப்பூர் வீராங்கனைளுக்கு பாரிய சவாலாக விளங்கினர்.

4ஆம் சுற்றின் நிறைவில் 2 அணிகளும் 52 புள்ளிகளைப் பெற்று சமநிலை அடைந்ததும் போட்டி இன்னும் விருவிருப்பானது.

வழங்கப்பட்ட முதலாவது மேலதிக நேரத்தில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வௌிப்படுத்தியிருந்தன.

நேர முடிவில் இருஅணிகளும் தலா 59 புள்ளிகளுடன் சமநிலை பெற்றன.

தீர்மானமிக்க இரண்டாவது மேலதிக நேரம் வழங்கப்பட்டதுடன் இக்கால எல்லையில் சிங்கப்பூர் வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

67 க்கு 64 என்ற புள்ளிகள் அடிப்படையில் சிங்கப்பூர் அணி சாம்பியனானது.

ஆசியக் கிண்ண வலைப்பந்தாட்ட வரலாற்றில் 4ஆவது தடவையாக சிங்கப்பூர் அணி சாம்பியனாகியுள்ளது.

2018  மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணி இலங்கை அணியிடம் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி இதற்கு முன்னர் 6 தடவைகள் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனாகியுள்ளமை விசேட அம்சமாகும்.