வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு

அச்சமின்றி நாட்டிற்கு சுற்றுலா மேற்கொள்ளுமாறு வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு

by Staff Writer 24-10-2024 | 10:04 AM

Colombo (News 1st) எதிர்வரும் சுற்றுலா காலப்பகுதியில் அச்சமின்றி இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளுமாறு சுற்றுலா ஊக்குவிப்பு பிரிவால் வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்க பாதுகாப்பு அமைச்சினால் வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளின் உளநலம் மற்றும் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்பதை உறுதிப்படுத்த முடியும் என சுற்றுலா ஊக்குவிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

பிரபல சுற்றுலாத்தலமான அறுகம்பை பகுதியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்ற நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று(23) முற்பகல் விடுத்த பாதுகாப்பு ஆலோசனையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பாரதூரமான அபாய நிலையை கருத்திற்கொண்டு தமது தூதரகத்தின் பணிக்குழாம் உறுப்பினர்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் அறுகம்பை பகுதிக்கு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மறு அறிவித்தல் வரை குறித்த பகுதியில் சுற்றுலா மேற்கொள்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அமெரிக்க தூதரகம், அமெரிக்க பிரஜைகளிடம் வேண்டுகோள் விடுத்தது.

இதேவேளை, அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசனையை மேற்கோள்காட்டி இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு பேரவையும் தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.