அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வட மாகாணத்திற்கு விஜயம்

by Staff Writer 23-10-2024 | 6:36 PM

Colombo (News 1st) இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வட மாகாணத்திற்கு இன்று(23) விஜயம் மேற்கொண்டிருந்தார்.

தமது பிராந்தியங்களில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்ற அமெரிக்க - இலங்கை நட்புறவை வௌிப்படுத்தும் வகையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியாவிற்கு மீண்டும் விஜயம் மேற்கொள்வதாக அவர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க தூதுவர் வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட பாரம்பரியத்திற்கான தமது அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் இவ்வாறான கலாசார அடையாளங்களைப் பாதுகாப்பதற்கு ஆதரவளிப்பதில் அமெரிக்கா பெருமை கொள்வதாக ஜூலி சங் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் இந்த சமூகம் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் புரிந்துகொள்ள எதிர்பார்ப்பதுடன் அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கு தேவையான செயன்முறைகளில் அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வட மாகாணத்தின் புதிய ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகத்தை சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த பிராந்தியத்தில் முன்னெடுக்கப்படும் அவரது திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துதல், உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் விவசாய அபிவிருத்திக்கு ஆதரவளித்தல் உள்ளிட்ட அமெரிக்கா - இலங்கை ஒத்துழைப்பிற்கான பல்வேறு தளங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டதாகவும் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பேர்னார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகையை இன்று சந்தித்துள்ளார்.

இதன்போது நீதி மற்றும் நல்லிணக்கத்திற்கான வாய்ப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கை அதன் முழு நோக்கத்தையும் அடைவதற்காக இலங்கையின் பொருளதார மீட்சிக்கு தொடர்ந்தும் உதவுவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக ஜூலி சங் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.