Colombo (News 1st) பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி Alejandro Toledo-விற்கு 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டமையால் இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2001 முதல் 2006ஆம் ஆண்டு வரை அவர் பெரு அரசாங்கத்தின் ஜனாதிபதியாக செயற்பட்டார்.
பெரு மற்றும் பிரேஸிலை இணைக்கும் வீதியை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்திற்காக, கட்டுமான நிறுவனமொன்றிடமிருந்து 35 மில்லியன் டொலர் இலஞ்சம் பெற்றுக்கொண்டுள்ளமை அவர் மீது சுமத்தப்பட்டுள்ள 4 குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.
78 வயதான அவர், ஸ்டென்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்ற பொருளாதார நிபுணராவார்.
இலஞ்சம் பெற்றுக்கொண்டமை மற்றும் நிதி தூயதாக்கல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், அமெரிக்காவில் வைத்து 2019ஆம் ஆண்டில் அவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த கட்டுமான நிறுவனத்திடம் இருந்து இலஞ்சம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் பெரு அரசாங்கத்தின் மேலும் இரு ஜனாதிபதிகளுக்கு எதிராகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.