தேசத்தின் சக்தியாய் 26ஆவது அகவையில் தடம் பதிக்கும் சக்தி தொலைக்காட்சி

by Staff Writer 20-10-2024 | 6:21 PM

Colombo (News 1st) தமிழ் பேசும் மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்து வீறு நடைபோடும் சக்தி தொலைக்காட்சி தேசத்தின் சக்தியாய் 26ஆவது அகவையில் இன்று(20) காலடி எடுத்து வைக்கின்றது.

இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் மரபுகளைக் காத்து, புதுமைகளைப் படைத்த சக்தி தொலைக்காட்சி தனது 26ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கின்றது.

கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் முன்னாள் பெருந்தலைவர் அமரர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களால் 1998 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி தமிழ் பேசும் மக்களின் சக்தியாக சக்தி தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.

நாட்டின் இலத்திரனியல் ஊடகத்துறைக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் சக்தி தொலைக்காட்சி, முதல்நிலை மற்றும் முன்னணி இலத்திரனியல் ஊடகமாகத் திகழ்கின்றது.

கலை, கலாசாரம், பண்பாடு, அரசியல் என அனைத்து துறைகளிலும் மக்களுக்கு தரமான நிகழ்ச்சிகளை வழங்கிய பெருமை சக்தி தொலைக்காட்சிக்கு உண்டு.

தனது 26 ஆண்டு கால சாதனைப் பயணத்தில் இலங்கை கலைஞர்களின் இலைமறை காய் திறமைகளுக்கு களமமைத்துக் கொடுக்கவும் சக்தி தொலைக்காட்சி எப்போதும் தவறவில்லை.

இசை இளவரசர்கள், சக்தி சுப்பர் ஸ்டார், சக்தி ஜூனியர் சுப்பர் ஸ்டார் ஆகிய நிகழ்ச்சிகளின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து இவ்வருடம் 'Shakthi Crown' மாபெரும் இசை நிகழ்ச்சியையும் நடாத்தி இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் தனித்தடத்தை பதித்துள்ள பெருமை சக்தி தொலைக்காட்சியையே சாரும்.

கலை, கலாசார அம்சங்களைப் பேணும் வகையில்  சக்தி TV, நியூஸ்ஃபெஸ்ட் நல்லூர் விசேட வளாகமும் இம்முறை அமைக்கப்பட்டு எம்மவர்களின் பாரம்பரியத்தையும் தொன்மைகளையும் பறைசாற்றும் வகையிலான பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தமை சக்தி தொலைக்காட்சியின் வெற்றிப் பயணத்தின் முக்கிய அங்கமாக விளங்குகின்றது.

சக்தி தொலைக்காட்சியின் 26 ஆவது அகவை தின நிகழ்வில் சக்தி தொலைக்காட்சி பணிப்பாளர் முருகேசு குலேந்திரன், சக்தி தொலைக்காட்சி சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஐயாத்துரை கஜமுகன், சக்தி தொலைக்காட்சியின் விற்பனைப் பிரிவு பணிப்பாளர் ஷிராஜ் ஷனூன் மற்றும் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

தமிழ் பேசும் மக்களின் சக்தியாக நேயர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்த சக்தி தொலைக்காட்சியின் சேவை, இனிவரும் காலங்களிலும் தேசத்தின் சக்தியாய் வீறுநடை போடவுள்ளது.

இரசிகர்களின் இதயங்களை வென்ற சக்தி தொலைக்காட்சி தடைக்கற்களை தகர்த்து வெற்றி நடைபோட நியூஸ்ஃபெஸ்ட்டின் ஆத்மார்த்தமான வாழ்த்துகள்...