சந்தையில் நாட்டரிசிக்கு தட்டுப்பாடு?

சந்தையில் நாட்டரிசிக்கு தட்டுப்பாடு? ; குற்றஞ்சாட்டும் வர்த்தக அமைச்சு

by Staff Writer 18-10-2024 | 10:27 AM

Colombo (News 1st) சந்தையில் நாட்டரிசியின் விலை, கட்டுப்பாட்டு விலையை விட அதிகரித்துள்ளது.

நாட்டரிசி நெல்லுக்கான தட்டுப்பாடு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மரதகஹமுல அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் விலை 230 ரூபாவை விடவும் அதிக சில்லறை விலையில் விற்பனை செய்யப்படுவதாக சங்கத்தின் தலைவர் B.K.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

நாட்டரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாவாகும்.

இவ்வாறான நிலைமைக்கு மத்தியில் நாட்டரிசி விலை தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை குறித்து வர்த்தக அமைச்சின் செயலாளர் M.M.நைமுதீனிடம் வினவிய போது, இந்த விடயம் தொடர்பில் பல்வேறு பிரிவுகள் ஊடாக ஆராய்ந்ததாக கூறினார்.

கடந்த போகம் மற்றும் இம்முறை போகத்தில் நாட்டரிசி நெல் அறுவடை சிறந்த மட்டத்தில் காணப்பட்டமை, விவசாயத்துறை அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது தெரியவந்ததாக அவர் தெரிவித்தார்.

அதற்கமைய, சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாடு உருவாக்கப்பட்டிருக்கலாமென அனுமானிக்க முடிவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த பிரச்சினை தொடர்பில் அரிசி ஆலை உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவுள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் M.M.நைமுதீன் தெரிவித்தார்.

அதன்பின்னர் சதொச ஊடாக நாட்டரிசி நெல்லை நேரடி விலைக்கு கொள்வனவு செய்து அதனை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் கூறினார்.