Colombo (News 1st) நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி 2ஆம் நாளான இன்று பெங்களூரில் ஆரம்பமானது.
முதல் நாளான நேற்று(16) முழுவதும் மழை பெய்ததால் ஆட்டம் முழுநாளும் தடைப்பட்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆரம்பம் முதலே கடும் தடுமாற்றத்திற்குள்ளானது.
அணித்தலைவர் ரோஹித் சர்மா 2 ஓட்டங்களுடனும் விராத் கொஹ்லி, சப்ராஸ் கான், கே.எல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஓட்டமின்றியும் ஆட்டமிழந்தனர்.
ரிஷப் பான்ட் பெற்ற 20 ஓட்டங்களே அணி சார்பில் ஒரு வீரர் பெற்ற அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.
அவருக்கு அடுத்தபடியாக யாசவி ஜஸவால் 13 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 46 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது.
13.2 ஓவர்கள் பந்துவீசிய மெட் ஹென்ரி 15 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும், வில்லியம் ரவுர்க் 12 ஓவர்களில் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பதிலளித்தாடும் நியூஸிலாந்துக்கு அணித்தலைவர் டொம் லதம் - டெவோன் கொன்வே ஜோடி சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தது.
முதல் விக்கெட்டுக்காக 67 ஓட்டங்கள் பகிரப்பட்ட வேளையில் டொம் லதம் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
என்றாலும் அடுத்ததாக டெவோன் கொன்வேயுடன் ஜோடி சேர்ந்த வில் யங் அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர வழிவகுத்தார்.
இவர்கள் 2 ஆம் விக்கெட்டுக்காக 75 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
வில் யங் 5 பளண்டரிகளுடன் 33 ஓட்டங்களைப் பெற்று வௌியேறு சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய டெவோன் கொன்வே 91 ஓட்டங்களைப் பெற்று வௌியேறினார்.
105 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 சிக்ஸர்கள், 11 பௌண்டரிகளையும் விளாசினார்.
ரவிச்சந்திரன் அஸ்வின், ரவிந்திர ஜடெஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
நியூஸிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இன்றைய 2ஆம் நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. ரச்சின் ரவீந்திரா 22 ஓட்டங்களுடனும், டெரில் மிட்ச்செல் 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.