நட்சத்திர நடிகர் சல்மான் கானை கொலை செய்ய முயற்சி

நட்சத்திர நடிகர் சல்மான் கானை கொலை செய்ய முயற்சி

by Staff Writer 17-10-2024 | 7:51 PM

Colombo (News 1st) பொலிவூட் சினிமாவின் நட்சத்திர நடிகர் சல்மான் கானை கொலை செய்வதற்கு 25 இலட்சம் இந்திய ரூபா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிராவின் பன்வேலில் உள்ள அவரது பண்ணை வீட்டின் அருகே வைத்து அவரை கொல்வதற்கு குற்றவாளிகள் திட்டமிட்டிருந்ததாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் நவி பகுதி பொலிஸாரினால் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குற்றப்பத்திரிகையில் 5 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் சிறையில் அடைக்கப்பட்ட சந்தேகநபர்கள் லோரன்ஸ் பிஷ்னோய் தலைமையிலான கும்பல் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பாகிஸ்தானிலிருந்து AK 47, AK 92 மற்றும் M 16 என்ற அதிநவீன துப்பாக்கிகளையும், பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவின் கொலையில் பயன்படுத்தப்பட்ட துருக்கி தயாரிப்பு Zigana ரக துப்பாக்கியையும் கொள்வனவு செய்ய திட்டஙகளை வகுத்திருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சல்மான் கானை கொல்ல 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதுடன் அவர்கள் அனைவரும் புனே, ராய்கட், நவி, மும்பை, தானே மற்றும் குஜராத்தில் பதுங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 60 முதல் 70 பேர் சல்மான் கானை கண்காணித்து வந்த நிலையில் சல்மான் கானை கொல்லும் திட்டம் கடந்த வருடம் ஆகஸ்ட் மற்றும் இவ்வருடம் ஏப்ரல் மாதத்துக்கு இடையில் வகுக்கப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் அனைவரும் கனடாவைச் சேர்ந்த கேங்ஸ்டர் கோல்டி ப்ரார் மற்றும் லோரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் ஆகியோரின் அனுமதிக்காக காத்திருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

58 வயதான நடிகர் சல்மான் கானை சுட்டுக் கொன்றுவிட்டு கன்னியாகுமரியில் ஒன்றுகூடி அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு தப்பிச் செல்ல 
துப்பாக்கிதாரிகள் திட்டமிட்டிருந்ததாக இந்திய புலனாய்வு அமைப்புகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலைக்கு தாம் பொறுப்பேற்பதாக லோரன்ஸ் பிஷ்னோய் அமைப்பு அறிவித்துள்ள பின்னணியில் இந்தக் குற்றப்பத்திரிகை பொலிஸாரால் தற்போது வௌியிடப்பட்டுள்ளது.

நடிகர் சல்மான் கானுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களில் பாபா சித்திக்கும் ஒருவர் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.