இலங்கையின் கல்வி தொடர்பான எதிர்காலத் திட்டங்கள்

உலகளாவிய தேவைகளை கருத்திற் கொண்டு இலங்கையின் கல்வி தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் - ஜனாதிபதி

by Staff Writer 16-10-2024 | 8:29 PM

Colombo (News 1st) "உலகளாவிய தேவைகளை கருத்திற் கொண்டு இலங்கையின் கல்வி தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும்" என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவிக்கின்றார்.

கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்களின் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

மாணவர்களுக்கு  ஏற்ற சூழலை உருவாக்கி சகல மாணவர்களுக்கும் கல்விக்கான பிரவேசத்தை வழங்கும் வகையில் பாடசாலைக் கல்வியை மறுசீரமைப்பது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் மனித வளத்தை மேம்படுத்துவதற்காக மாணவர்களை அறிவாற்றல் நிறைந்தவர்களாக மாற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அடுத்த 10 வருடங்களில்  உலகிற்கு தேவையான மனித வளத்தை உருவாக்கும் பொறுப்பு கல்வி அதிகாரிகளை சார்ந்துள்ளது எனவும் அதற்கான பரந்த நோக்குடன் கல்வித் திட்டங்களைத் தயாரிக்க வேண்டியதன் அவசியம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைக் கல்வி நவீனமயமாக்கல், ஆசிரியர் கல்வி, இடைநிலைக் கல்வி, தொழில்நுட்பக் கல்வி, தகவல் தொழில்நுட்பக் கல்வியின் மேம்பாடு என்பன தொடர்பில் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

இதற்கான திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.

விஞ்ஞானம், கணிதம், தொழில்னுட்பம் ஆகிய உயர்தர பாடங்களை கற்பிக்கும் பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.