ஜனாதிபதி தேர்தல் செலவை சமர்ப்பிக்கும் இறுதி நாள்

ஜனாதிபதித் தேர்தல் பிரசார வரவு - செலவு அறிக்கையை சமர்ப்பிக்கும் இறுதி நாள் இன்று

by Staff Writer 13-10-2024 | 1:18 PM

Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களின் பிரசார வரவு - செலவு அறிக்கையை சமர்ப்பிக்கும் இறுதி நாள் இன்றாகும்(13).

20 வேட்பாளர்கள் மாத்திரமே இதுவரை வரவு - செலவு அறிக்கையை கையளித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வௌியாகி 21 நாட்களுக்குள் பிரசார வரவு - செலவு அறிக்கையை கையளிக்க வேண்டும்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கலாநிதி விஜயதாச ராஜபக்ச, ஜனக ரத்நாயக்க உள்ளிட்ட 20 பேர் இதுவரை அறிக்கையை கையளித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளரை முன்மொழிந்த தரப்பு இந்த பிரசார வரவு - செலவு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

பிரசார வரவு - செலவு அறிக்கையை இன்றைய தினத்திகுள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் குறித்த வேட்பாளர்கள் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் அவர்கள் தமது வாக்குரிமை மற்றும் ஆசனத்தை இழக்க நேரிடுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

குறித்த வேட்பாளர்களுக்கு எதிராக 100,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்படுமெனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.