நாட்டின் பல பகுதிகளில் கனமழை

நாட்டின் பல பகுதிகளில் கனமழை

by Staff Writer 11-10-2024 | 9:43 AM

Colombo (News 1st) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று(11) 150 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டை அண்மித்துள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் காரணமாக மழையுடனான வானிலை நீடிப்பதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளிலும் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, நேற்று(10) காலை 8.30 முதல் இன்று(11) அதிகாலை 2.30 வரையான காலப்பகுதியில் ஹங்வெல்ல பகுதியிலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அங்கு 196.5 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

குறித்த காலப்பகுதியில் திவுலபிட்டியவில் 173.5 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் களுத்துறை வோகன் தோட்டத்தில் 163.5 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பலத்த மழையுடனான வானிலையால் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, காலி மாவட்டத்தின் பத்தேகம,நெலுவ, நாகொட மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, தொடங்கொட, வல்லவிட்ட, ஹொரண, புளத்சிங்கள மற்றும் இங்கிரிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல பிரதேச செயலக பிரிவிற்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தவிர, பதுளை, கொழும்பு, காலி, கம்பஹா, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்