உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய நிலந்த ஜயவர்தன

முன்னாள் புலனாய்வு பிரிவு பிரதானி நிலந்த ஜயவர்தன உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்

by Staff Writer 07-10-2024 | 9:02 PM

Colombo (News 1st) முன்னாள் புலனாய்வு பிரிவு பிரதானி நிலந்த ஜயவர்தன உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வழங்கப்படவிருந்த எஞ்சிய இழப்பீட்டுத் தொகையை உரிய தினத்தில் செலுத்துவதற்கு தவறியதன் காரணமாகவே நிலந்த ஜயவர்தன இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து புலனாய்வுத் தகவல் கிடைத்தும் அதனை தடுக்கத் தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று(07) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 7 பேரடங்கிய நீதியசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சிசிர மென்டிஸ் ஆகியோர் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி சிசிர மென்டிஸ் ஆகியோர் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட இழப்பீட்டை வழங்கியுள்ளனர்.

எனினும்  நிலந்த ஜயவர்தன தனக்கு நிர்ணயிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை உரிய திகதிக்கு முன்னதாக முழுமையாகச் செலுத்தத் தவறியதன் காரணமாக சட்ட 
மாஅதிபரால் அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட்டது.

எவ்வாறாயினும், தமது சேவை பெறுநர் 75 மில்லியன் இழப்பீட்டுத் தொகையில் எஞ்சிய 65 மில்லியனை தனது ஏற்கனவே செலுத்திவிட்டதாக ​​நிலந்த ஜயவர்தன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர, இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சுட்டிக்காட்டினார்.

எஞ்சிய இழப்பீட்டுத் தொகை சேகரிப்பதற்கு அவரின் பல்கலைக்கழக மற்றும் பாடசாலை நண்பர்கள் முன்வந்து நடவடிக்கை எடுத்ததாக சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.

இந்த தொகை இன்று வங்கி ஊடாக குறித்த அலுவலகத்திற்கு செலுத்தப்படும் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.

இதனால் நீதிமன்ற உத்தரவிற்கு இணங்கி முழுமையான இழப்பீட்டுத் தொகையை வழங்குவதால் தனது சேவைபெறுநருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர வேண்டாம் என ஜனாதிபதி சட்டத்தரணி மன்றில் கோரிக்கை விடுத்தார்.

விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம் இது தொடர்பான தீர்ப்பை வழங்குவதற்காக பிற்பகல் 1.30 வரை வழக்கை ஒத்திவைத்தனர்.

பிற்பகல் 1.30 அளவில் மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட திகதியில் தமது சேவைபெறுநருக்கு இழப்பீட்டை வழங்க முடியாமை குறித்து அவர் வருந்துவதாக பிரதிவாதியான நிலந்த ஜயவர்தன சார்பில் ஆஜரான சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர தெரிவித்தார்.

பிரதிவாதி நிலந்த ஜயவர்தன இன்று(07) நீதிமன்றத்தில் ஆஜரானதுடன் அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி விடயங்களை முன்வைத்ததையடுத்து திறந்த நீதிமன்றில் இழப்பீட்டை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரினார்.

இந்த மனுக்கள் எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.