இலஞ்ச,ஊழல் விசாரணை ஆணைக்குழு பணிப்பாளர் இராஜினாமா

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா

by Staff Writer 07-10-2024 | 7:49 PM


Colombo (News 1st) இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கனிஷ்க விஜேரத்ன தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம்  கையளித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி உதித இகலஹேவா இன்று(07) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின்  நியமனத்திற்கு எதிராக ஊடகவியலாளர் ருவினி பொன்சேகா மற்றும் ட்ரான்ஸ்ஃபெரன்ஸி இன்டர்நேஷனல் நிறுவனம் தாக்கல் செய்த மனு இன்று(07) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உதித இகலஹேவா இவ்விடயத்தை குறிப்பிட்டார்.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதியரசர்களான ப்ரீதி பத்மன் சுரசேன, ஜனக் டி சில்வா மற்றும் குமுதினி விக்ரமசிங்க ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுவின் பிரதிவாதிகளாக இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சிலர் பெயரிடப்பட்டுள்ளனர்.

ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கனிஷ்க விஜயரத்னவின் நியமனம், சட்டத்திற்கு முரணான வகையிலும் அரசியலமைப்பிற்கு முரணான வகையிலும் அமைந்துள்ளதால் அந்த நியமனத்தை இரத்து செய்யுமாறு கோரி மனுதாரர்கள் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

தமது சேவைபெறுநர் மீண்டும் நீதிமன்ற சேவையில் இணைந்து கொள்வதற்கு ஆர்வமாக உள்ளதால் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக
இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கனிஷ்க விஜேரத்ன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உதித இகலஹேவா மன்றில் சுட்டிக்காட்டினார்.

இந்த நியமனத்தினால் தமது சேவைபெறுநர்கள் உள்ளிட்ட நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகள் எடுத்துரைத்தனர்.

இரு தரப்பு விடயங்களையும் ஆராய்ந்த நீதிமன்றம் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கியது.

மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான விரான் கொரயா மற்றும் சாலிய பீரிஸ் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

சட்ட மாஅதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி விராஜ் தயாரத்ன ஆஜராகினர்.