Colombo (News 1st) பரிசுப் பொருட்களை பெற்ற குற்றச்சாட்டில் சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் மூத்த அமைச்சரவையின் அமைச்சராக இருந்த 62 வயதுடைய சுப்பிரமணியம் ஈஸ்வரன் என்பவருக்கே இவ்வாறு சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் தமது பதவிக் காலத்தில் 403,000-இற்கும் அதிகமான சிங்கப்பூர் டொலர் பெறுமதியான பரிசுப் பொருட்களைப் பெற்றுக்கொண்டமை மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கு இடையூறாக இருந்தமை இவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களாகும்.
அவர் பெற்றுக்கொண்ட பரிசுப் பொருட்களில் Formula 1 Grand Prix, Brompton T-line மோட்டார் சைக்கிள், பல்வேறுபட்ட மதுபானங்கள் மற்றும் தனியார் ஜெட் விமானத்திற்கான டிக்கட் ஆகியவை அடங்குகின்றன.
இந்த வழக்கை விசாரித்த சிங்கப்பூர் உயர் நீதிமன்றம், அமைச்சர் குற்றவியல் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளதுடன் அரச ஊழியர்கள் அன்பளிப்புகளைப் பெறும்போது அரசாங்கத்தின் பக்கச்சார்பற்ற தன்மை மற்றும் ஒருமைப்பாடு மீதான மக்கள் நம்பிக்கை சீர்குலைக்கப்படுவதாக சிங்கப்பூர் நாட்டின் உயர் நீதிமன்ற பிரதி நீதவான் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் மரணதண்டனை கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ள அதே அறையில் அமைச்சர் தனது தண்டனையை அனுபவித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
குறித்த அறையில் மின்விசிறிகள் இல்லாததால் பல கைதிகள் வைக்கோல் விரிப்பில் தூங்குகின்றமை பற்றியும் வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
சிங்கப்பூரில் அமைச்சர் ஒருவர் 1986கஆம் ஆண்டின் பின்னர் இவ்வளவு பெரிய ஊழல் விசாரணையை எதிர்கொண்டார் என்பது இவ்வழக்கின் சிறப்பம்சமாகும்.
1986ஆம் ஆண்டு தேசிய வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த Teh Cheang Wan இலஞ்சம் வாங்கியதாக விசாரிக்கப்பட்டார்.
ஆனால் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு முன்னரே அவர் தற்கொலை செய்து கொண்டார்.
1975ஆம் ஆண்டு முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் வீ துன் பூன் ஊழல் வழக்கில் 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.