மக்கள் நல அரச சேவையை உருவாக்க வேண்டும்

மக்கள் நல அரச சேவையை உருவாக்க வேண்டும் - ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

by Staff Writer 03-10-2024 | 5:44 PM


Colombo (News 1st) வினைத்திறன் மிக்க மக்கள் நல அரச சேவையை உருவாக்குவதற்காக தம்மை அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்கு தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்களுக்காக சேவையாற்றும் அரச அதிகாரிகள் அரசியல் பழிவாங்கல்களை எதிர்நோக்கும் நிலை இதுவரை காலமும்  காணப்பட்ட போதும் அந்த நிலைமை இனிமேலும் தொடராதெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சராக இன்று காலை கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனைக் தெரிவித்தார்.

விவசாய அமைச்சின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அமைச்சின் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

கிராமிய வறுமையை ஒழிப்பதற்காக விவசாய அமைச்சு வழங்கியுள்ள பங்களிப்பு மகத்தானது எனவும் அரச அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு அமைய வறுமையை ஒழிப்பது தொடர்பான  தீர்மானத்தை மேற்கொள்ள முடியுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் புதிய அரசியல் சம்பிரதாயம்  மற்றும் பழைய அரசியல் கலாச்சாரத்திற்கான எதிர்ப்பு, பிரஜைகள் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள், அரச சேவையின்  செயற்பாடு தொடர்பான பிரஜைகளின் அதிருப்தி போன்றன தாக்கம் செலுத்தியதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார்.  

எனவே வினைத்திறன் மிக்க மக்கள் நல அரச சேவையை உருவாக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி பொருளாதார வீழ்ச்சியின் பின்னணியில் மோசடி மற்றும் ஊழல் இருப்பதாக மக்கள் நம்பியதால் அதனை தடுப்பதற்காகவே இம்முறை மக்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அரச கட்டமைப்பு முழுவதும் பரவியுள்ள  பாரிய மோசடிகள் மற்றும் ஊழலைத் தடுத்து நிறுத்துவதற்கு மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவதாகவும் அரச ஊழியர்கள் தமது பொறுப்புகளை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென   ஜனாதிபதி இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரஜைகளை திருப்திப்படுத்தும் வகையில் வினைத்திறன் மற்றும்  செயற்றிறன் மிக்க அரச சேவையை உருவாக்க தற்போதைய அரச உத்தியோகத்தரின் அர்ப்பணிப்பு அவசியமானது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

எதிர்வரும் 40 நாட்கள் நிலைமாற்ற  காலமாகும் எனவும் அந்த காலப்பகுதியில் அரச சேவை  வீழ்ச்சியடையாமல் பேணுவதற்கு அரச உத்தியோகத்தர்கள் பாடுபட வேண்டும் என ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்.