தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள்

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணி ஆரம்பம்

by Staff Writer 01-10-2024 | 6:49 PM

Colombo (News1st) 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இன்று(01) ஆரம்பிக்கப்பட்டது.

பாராளுமன்றத் தேர்தல் சட்டத்திற்கு அமைய தேர்தல் அறிவிக்கப்பட்டு 7ஆவது நாளிலிருந்து 14 ஆவது நாள் வரை தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறினார்.

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பே இதற்கும் பயன்படுத்தப்படவுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்த அனைத்து வாக்காளர்களும் இம்முறை தேர்தலுக்காக மீண்டும் தமது தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல் கட்டாயமாகும்.

தகைமையுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களும் எதிர்வரும் 08 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் உரிய  மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.

புதிய பாராளுமன்றம் நவம்பர் 21 ஆம் திகதி கூடவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.