வெற்றியை நோக்கி இலங்கை

15 வருட வரலாற்றை மாற்ற பிரகாசமான வாய்ப்பு

by Rajalingam Thrisanno 28-09-2024 | 6:37 PM

Colombo(News1st) 

நியூஸிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இன்னிங்ஸால் வெற்றிகொள்ளும் நிலைக்கு இலங்கை அணி உயர்ந்துள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றியீட்டும் பட்சத்தில் நியூஸிலாந்துக்கு எதிராக 15 வருடங்களின் பின்னர் டெஸ்ட் தொடர் வெற்றியை ஈட்டிய பெருமையை பெற முடியும்.

காலியில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 2ஆம் நாளான நேற்று(27) 5 விக்கெட் இழப்புக்கு 602 ஓட்டங்களைக் குவித்து முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.

டினேஷ் சந்திமால் 116 ஓட்டங்களை பெற்றதுடன் கமிந்து மென்டிஸ் 182 ஓட்டங்களையும் குசல் மென்டிஸ் 106 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர்.

பதிலளித்தாடிய நியூஸிலாந்து அணி 3ஆம் நாளான இன்று முற்பகலில் 88 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

மிட்ச்செல் ஷான்டர் (Mitchell Santner) பெற்ற 29 ஓட்டங்களே அணி சார்பில் வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.

8 வீரர்கள் 10க்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய 18 ஓவர்களில் 42 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளையும் நிஷான் பீரிஸ் 3 விக்கெட்டுகளையும் அசித பெர்னாண்டோ ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேலும் 514 ஓட்டங்களைப் பெற வேண்டிய கட்டாயத்தில் பலோஒன்னில்(Following on) இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து அணி முதல் ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான டொம் லதம்(Tom Latham) ஓட்டமின்றி ஆட்டமிழந்தார்.

எனினும், டெவோன் கொன்வே(Devon Conway) 61 ஓட்டங்களையும் கேன் வில்லியம்ஸன்(Kane Williamson) 46 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு ஆறுதல் அளித்தனர்.

நியூஸிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 199 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இன்று(28) மாலை 4.40 அளவில் போதிய வௌிச்சமின்மை மற்றும் மழை காரணமாக தடைப்பட்டு ஆட்டம் தடைப்பட்டு 3ஆம் நாள் ஆட்டம் முடிவிற்குவந்தது.

பந்துவீச்சில் நிஷான் பீரிஸ் 3 விக்கெட்டுகளையும் பிரபாத் ஜயசூரிய, தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க நியூஸிலாந்து மேலும் 315 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அயர்லாந்துக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்களால் வெற்றி பெற்றதே இலங்கையின் தற்போதைய சாதனை வெற்றியாகும்.

அந்த சாதனையை முறியடிப்பதற்கான வாய்ப்பும் தற்போது இலங்கை அணிக்கு உதயமாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.