புலமைப்பரிசில் பரீட்சை விசாரணைகளுக்கு குழு

புலமைப்பரிசில் பரீட்சை வினாப்பத்திரம் தொடர்பிலான விசாரணைகளுக்கு சுயாதீன குழு நியமனம்

by Staff Writer 28-09-2024 | 8:46 PM

Colombo (News 1st) தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாப்பத்திரம் கசிந்தமை தொடர்பிலான விசாரணைகளுக்கு 07 நிபுணர்கள் அடங்கிய சுயாதீன குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பேராசிரியர் ஹரினி அமரசூரியவின் ஆலோசனைக்கமைய இந்த குழு நியமிக்கப்பட்டதாக கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்தார்.

இந்தக் குழுவில் வெளிநாட்டு அனுபவமுள்ள பல நிபுணர்களும் உள்ளடங்குகின்றனர்.

இந்தக் குழு, 2 நாட்களுக்குள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில்  எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமருக்கு பரிந்துரைக்கவுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பிலான குற்றப்புலனாய்வுத் திணைக்கள விசாரணைகளின் ஆரம்ப அறிக்கையும் அமைச்சிடம் கிடைத்துள்ளதாக திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பரீட்சைகள் திணைக்களமும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தேசிய கற்கைகள் நிறுவகத்தின் அதிகாரியொருவரும் பகுதி நேர வகுப்பாசிரியர் ஒருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய கற்கைககள் நிறுவக அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் பல ஆசிரியர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர கூறினார்.

புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் வினாப்பத்திரம் தொடர்பிலான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனவும் அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்