சமூக வலைத்தளங்கள் ஊடான பிரச்சாரங்களுக்கு தடை

சமூக வலைத்தளங்கள் ஊடாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பொலிஸ்

by Staff Writer 19-09-2024 | 2:26 PM

Colombo (News 1st) தேர்தல் பிரச்சாரங்களுக்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தின் பின்னர் சமூக வலைத்தளங்கள் ஊடாக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தில் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களுக்கு எதிராகவும் சட்டம் அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் பாதுகாப்பை முன்னிட்டு 63,000-இற்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நிஹால் தல்தூவ கூறியுள்ளார்.

நேற்று(18) வரை தேர்தல் தொடர்பில் 449 முறைப்பாடுகள் பதிவானதுடன், அதில் 309 முறைப்பாடுகள் தேர்தல் சட்டமீறல்களாகும்.

முறைப்பாடுகளுடன் தொடர்புடைய 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.