உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

e-Visa விவகாரம் ; குடிவரவு - குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

by Staff Writer 13-09-2024 | 1:11 PM

Colombo (News 1st) குடிவரவு - குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம், தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தில் இன்று(13) முன்னிலையாக வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இலத்திரனியல் விசா முறைமையின் கீழ் விசா வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கி, உயர் நீதிமன்றத்தினால் கடந்த ஆகஸ்ட் 2ஆம் திகதி வழங்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவினால் ஏற்பட்டுள்ள நடைமுறை சிக்கல்களால் அதனை செயற்படுத்துவது கடினமானது என குடிவரவு - குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தினால் சட்ட மாஅதிபரின் ஊடாக உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உள்ளிட்ட சில தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட சில மனுக்கள் மீண்டும் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

கடந்த ஆகஸ்ட் 2ஆம் திகதி, அப்போது காணப்பட்ட புதிய விசா முறைமையை இடைநிறுத்திய உயர் நீதிமன்றம், முன்னர் காணப்பட்ட முறைமையின் கீழ் விசாவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டு இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்திருந்தது. 

குறித்த மனு மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குடிவரவு - குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சார்பில் முன்னிலையான சட்ட மாஅதிபர் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த, உயர் நீதிமன்ற நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தில் இன்றைய தினத்திற்குள் முன்னிலையாக வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. 

இது உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்மானத்தை மீறும் செயற்பாடாகும் என சுட்டிக்காட்டிய நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன, குடிவரவு - குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி விளக்கமளிக்க வேண்டுமென உத்தரவிட்டார். 

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த முடியாதுள்ளதாக குடிவரவு - குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் அறிவித்துள்ளமை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடாகும் என மனுதாரரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இதன்போது தெரிவித்தார்.