Bloomberg-இன் புதிய வௌிக்கொணர்வு...

Bloomberg-இன் புதிய வௌிக்கொணர்வு...

by Staff Writer 12-09-2024 | 8:49 AM

Colombo (News 1st) இலங்கையின் அரசியல் நிச்சயமற்ற தன்மையை அடிப்படையாகக் கொண்டு, இறையாண்மை முறிகளை கொள்வனவு செய்துள்ள முதலீட்டாளர்கள் அவற்றை விற்பனை செய்யும் நிலைமை உருவாகியுள்ளதாக உலகின் முன்னணி பொருளாதார செய்தி வழங்குநரான புளும்பேர்க்(Bloomberg) இணையத்தளம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காரணமாக நாட்டில் நிலவும் அரசியல் நிச்சயமற்ற தன்மையை கருத்திற்கொண்டு இலங்கை தொடர்பில் தமது பங்களிப்பை குறைப்பதற்கு முதலீட்டாளர்கள் தீர்மானித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புளும்பேர்க் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய 2030 ஆம் ஆண்டில் முதிர்ச்சியடையவுள்ள இறையாண்மை முறிகளின் மதிப்பு தற்போது டொலருக்கு நிகராக 3 சதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இது பெப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரையான காலப்பகுதிக்குள் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியாகும்.

சந்தை மீதான அழுத்தம் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பிருந்தே அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள புளும்பேர்க் இணையத்தளம், கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கு நாட்டின் தலைமைத்துவம் மாறுவதன் மூலம் தாக்கம் ஏற்படலாம் என முதலீட்டாளர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள வேலைத்திட்டத்தை மீளாய்வு செய்வதற்கோ அல்லது மீண்டும் கலந்துரையாடுவதற்கோ எதிர்பார்த்துள்ளதாக நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளமை இதற்கான காரணமாகும்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் கீழ் மேற்கொண்ட நடவடிக்கைகளால் அவரது ஜனரஞ்சகத்தன்மை குறைவடைந்துள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியின் அனுர குமார திசாநாயக்க அவரது பிரதான சவாலாக மாறியுள்ளதாகவும் புளும்பேர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பலதரப்பு கடன் வழங்குநர்களுடன் இணக்கம் காணப்பட்ட கடன் மறுசீரமைப்பு வரைபையும் தேசிய மக்கள் சக்தி எதிர்ப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள எம்.என்ட்.ஜி இறையாண்மை முறிகள் தொடர்பிலான நிபுணத்துவ நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள ஸ்திரமற்ற நிலை கடன் மறுசீரமைப்பு கால எல்லை தொடர்பிலான உறுதியற்ற நிலையால் இலங்கையின் இறையாண்மை முறிகள் வலுவற்றதாகியுள்ளதாக குறித்த அதிகாரி புளும்பேர்க் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.

ஏதேனும் ஒரு வகையில் தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டினால் தற்போது சந்தையில் எதிர்பார்க்கப்படுகின்ற கால எல்லை மேலும் நீடிக்கலாம் எனவும் குறித்த அதிகாரி  சுட்டிக்காட்டியுள்ளார்.