வேட்பாளர்களை பிரச்சாரப்படுத்தும் ஸ்டிக்கர் நீக்கம்

வேட்பாளர்களை பிரச்சாரப்படுத்தும் ஸ்டிக்கர்களை அகற்ற நடவடிக்​கை

by Staff Writer 10-09-2024 | 2:48 PM

Colombo (News 1st) ஜனாதிபதி வேட்பாளர்களை பிரச்சாரப்படுத்தும் வகையில் ஸ்டிக்கர்களை ஒட்டி பயணித்த 10 முச்சக்கர வண்டிகளில் குறித்த ஸ்டிக்கர்களை அகற்ற நடவடிக்​கை எடுக்கப்பட்டுள்ளது.​

கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளுக்கமைய இந்த முச்சக்கர வண்டிகள் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி வேட்பாளர்களை பிரச்சாரப்படுத்தும் வகையில் ஸ்டிக்கர்களை ஒட்டி பயணிக்கும் தனியார் பஸ்கள், முச்சக்கர வண்டிகள், ஏனைய தனியார் வாகனங்களை அடையாளம் காணும் விசேட நடவடிக்கை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தேவையான சந்தர்ப்பங்களில் வீதித்தடைகளை எற்படுத்தி வாகனங்களை சோதனைக்கு உட்படுத்தி, ஸ்டிக்கர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், அவ்வாறான வகையிலான ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டுவதை தவிர்ப்பதுடன், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகள் 1981ஆம் ஆண்டு 15 இலக்க ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான சட்டத்தின் 74 ஆவது சரத்திற்கு அமைவாக குற்றமாகுமென தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது​.