10 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு டெஸ்ட் வெற்றி

10 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு டெஸ்ட் கிரிக்கெட் வெற்றி

by Chandrasekaram Chandravadani 09-09-2024 | 5:59 PM

Colombo (News 1st) இங்கிலாந்து மண்ணில் 10 வருடங்களுக்கு பின்னர் இலங்கை அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியொன்றில் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

த ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், 219 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 2 விக்கெட்களை மாத்திரமிழந்து வெற்றியை தனதாக்கியது.

பெத்தும் நிஷங்க ஆட்டமிழக்காது 127 ஓட்டங்களை குவித்தார்.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி, முதலாவது இன்னிங்ஸில் 325 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 156 ஓட்டங்களையும் பெற்றது.

இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸில் 263 ஓட்டங்களை பெற்றது.

எவ்வாறாயினும், 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை 2 க்கு 1 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

லண்டன் ஓவல் மைதானத்தில் இலங்கை அணி விளையாடிய இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

26 வருடங்களுக்கு முன்னர் இந்த மைதானத்தில் இலங்கை அணி முதல் டெஸ் போட்டியில் விளையாடியிருந்தது.

1998ஆம் ஆண்டு அர்ஜூன ரனதுங்க தலைமையிலான இலங்கை அணி 10 விக்கெட்களால் வெற்றி பெற்றது.