ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு 73 ஆண்டுகள்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இன்றுடன் 73 ஆண்டுகள் பூர்த்தி

by Staff Writer 02-09-2024 | 7:42 PM

Colombo (News1st) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 73 ஆவது ஆண்டு நிறைவு இன்றாகும்.

1951ஆம் ஆண்டு செப்டெம்பர் இரண்டாம் திகதி எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு 5 வருடங்களின் பின்னர் மக்கள் ஐக்கிய முன்னணியின் ஆதரவுடன் நாட்டைக் கைப்பற்றும் அளவுக்கு பலமான மக்கள் சக்தியைக் கட்டியெழுப்ப முடிந்தது.

1956ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியை வெற்றியை நோக்கி வழிநடத்திய எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க நாட்டின் நான்காவது பிரதமரானார்.

அவரது ஆட்சிக் காலத்தில்  சர்வதேச நிறுவனங்களிடம் இருந்த இலங்கையின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மக்கள் மயமாக்கப்பட்டதுடன் சிங்களம் அரச மொழியாக அறிவிக்கப்பட்டது.

அன்று முதல் இதுவரை இடதுசாரி கட்சிகள் மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கூட்டணி 30 வருடங்களுக்கு மேலாக நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டது.

இலங்கையை குடியரசாக மாற்றியதன் பெருமையும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்கேயுள்ளது.

உலகின் முதலாவது பெண் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்க 41 வருடங்களாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு தலைமை வகித்தார்.