ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைப் பிரகடனம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைப் பிரகடனம்

by Staff Writer 02-09-2024 | 7:59 PM

Colombo (News1st) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஸவின் ஜனாதிபதித் தேர்தல் கொள்கைப் பிரகடனம் இன்று(02) முற்பகல் வௌியிட்டு வைக்கப்பட்டது.

நாமலின் தொலைநோக்கு - இது உங்களுக்காக உங்கள் நலனில் அக்கறைக் கொண்ட ஒருங்கிணைந்த, வளர்ச்சியை நோக்கிய தசாப்தம் எனும் தொனிப்பொருளில் கொள்கை பிரகடனம் அமைந்துள்ளது.

3 வருடங்களுக்குள் மோசடி மற்றும் ஊழலை முழுமையாக ஒழிப்பதாக கொள்கைப் பிரகடனத்தை வௌியிட்டு நாமல் ராஜபக்ஸ அறிவித்தார்.

கொள்கைப் பிரகடனம் முதலில் சர்வ மதத்தலைவர்களிடம் வழங்கப்பட்டது.

05 முதல் 10 வருடங்களுக்குள் நாட்டை அபிவிருத்தி செய்யும் வகையில் இந்தக் கொள்கை பிரகடனம் தயாரிக்கப்பட்டுள்ளதாக இங்கு உரைநிகழ்த்திய ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கான பொறுப்பு தமக்குள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கான இயலுமை தமக்கு இருப்பதாகவும் எதிர்வரும் 10 வருடங்களுக்குள் அபிவிருத்தியடைய செய்ய முடியும் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாகவும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியை இரண்டு மடங்காக அதிகரிக்க  வேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனை முன்னிட்டு பல்வேறு இலக்குகளை கொண்டுள்ளதாக குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஸ் டிஜிட்டல் மயமாக்கல் குறித்தும் தௌிவுப்படுத்தினார்.

நிறுத்தப்பட்டுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை முறையை தமது ஆட்சியில் முதல் 06 மாதங்களுக்குள் அனைவருக்கும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் மக்களுக்கான சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்குவதாக அவர் உறுதியளித்தார்.

30 வருடங்களாக யுத்தத்தை மையமாகக் கொண்டே பலர் அரசியல் செய்ததாகவும் சில அரசியல் தலைவர்கள் சமாதானத்தை கொண்டுவருவதற்காக நியமிக்கப்பட்டதாகவும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

சமாதானத்தை முன்னிட்டு சிலர் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டதாகவும் நாமல் ராஜபக்ஸ கூறினார்.

எனினும், முன்னாள் ஜனாதிபதி 3 வருடங்களில் நாட்டை அபிவிருத்தி செய்தது மாத்திரமின்றி நிலையான சமாதானத்தையும் ஏற்படுத்திக் கொடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னெடுத்த விவசாயக் கொள்கையையே தாமும் முன்னெடுப்பதாக நாமல் ராஜபக்ஸ உறுதியளித்தார்.

இதேவேளை, தற்போது நடைமுறையிலுள்ள சிக்கலான, வௌிப்படைதன்மையற்ற அனைத்து வகையான வரிகளையும் இரத்து செய்து எளிமையான வரிவிதிப்பு முறையை நடைமுறைப்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள வரி வருமானம் குறையாமல் இருக்கும் வகையில் சம்பந்தப்பட்ட முக்கிய அரச நிறுவனங்களை தொடர்பு கொண்டு வரிவிதிப்பு வலையமைப்பை விரிவுபடுத்தவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நெல், மரக்கறி , பழச்செய்கை மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு மஹிந்த சிந்தனை மானியத் திட்டத்தை போன்று நிரந்தர உர மானியத் திட்டத்தை விவசாயிகளுக்கு வழங்குவதாகவும் கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலையான வருமானமின்றி இருப்போருக்கும் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கும் 3 வேளை உணவு வழங்குவதற்கு சமுர்த்தி கொடுப்பனவுகள் மூலம் போதிய மானிய தொகையை தொடர்ந்து வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயம் மற்றும் கால்நடைத்துறை ஊடாக கிடைக்கும் தேசிய உற்பத்தியை 18 பில்லியன் டொலராக உயர்த்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் மத்தியில் நிலவும் சம்பளப் பிரச்சனைக்கு அனைத்து தரப்பினரின் இணக்கப்பாட்டுடன் நிரந்தர தீர்வு வழங்கப்படுமெனவும் நாமல் ராஜபக்ஸ தனது கொள்கை பிரகடனத்தில் தெரிவித்துள்ளார்.