தனித்துவமான ரியாலிட்டி இசை நிகழ்ச்சியான SHAKTHI CROWN இன் மாபெரும் இறுதிப் போட்டி இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில் இன்று(24) பிரம்மாண்டமாக நடைபெறுகின்றது.
மரபுகளைத் தகர்த்த பாரதியின் புதுக்கவியாய் வீறு நடைபோடும் சக்திTV தொலைக்காட்சி வரலாற்றில் படைத்த சாதனைகளோ ஏராளம்...
சாதனைப் பயணத்தில் இசை இளவரசர்கள், சக்தி சுப்பர் ஸ்டார், சக்தி ஜூனியர் சுப்பர் ஸ்டார், நிகழ்ச்சிகளின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து தனது ரசிகர்களுக்கு 'SHAKTHI CROWN' ஊடாக மற்றுமொரு சர்வதேச தரம் வாய்ந்த ரியாலிட்டி இசை நிகழ்ச்சி அனுபவத்தை வழங்குகின்றது.
நாட்டின் முதற்தர இலத்திரனியல் சிருஷ்டிகர்த்தாக்களான எம்.ரீ.வி - எம்.பீ.சி ஊடக வலையமைப்பு, முதற்தர செய்தி வழங்குநர் நியூஸ் ஃபெஸ்ட், தெற்காசியாவின் பிரமாண்ட கலைக் கேந்திரமான ஸ்டைன் ஸ்டூடியோஸ், இசையுலகின் புரட்சியாய் திகழும் எம்.என்டர்டெய்ன்மன்ட் உள்ளிட்ட ஊடகத்துறை ஜாம்பவான்களின் ஒருங்கிணைந்த பலத்துடன் தனித்துவமாய் SHAKTHI CROWN நிகழ்ச்சி இம்முறை பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட சக்தி க்ரவுன் நிகழ்ச்சியில் 5000 மேற்பட்ட போட்டியாளர்கள் குரல் தேர்வில் பங்குபற்றியதோடு அவர்களில் திறமையை வௌிப்படுத்திய 6 பேர் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகினர்.
மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த பி.சிட்சபேஷன் , புத்தளத்தின் ஜி.கே, மாத்தளையைச் சேர்ந்த எஸ்.டி. மயூரன், கண்டியின் அட்ஷயா, பருத்தித்துறையைச் சேர்ந்த ஆகாஷ் மதன் மற்றும் கண்டியின் பிரணவி ஆகியோரே SHAKTHI CROWN மாபெரும் இறுதிப் போட்டியில் சாம்பியன் மகுடத்திற்காக போட்டியிடுகின்றனர்.
எமது மண்ணின் இசைக் கலைஞர்களில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் புதிய வரலாறு படைக்கவுள்ள சக்தி கிரவுண் மகுடத்தை சூடப்போவது யார்? எனும் எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
SHAKTHI CROWN இன் மாபெரும் இறுதிப் போட்டி இன்றிரவு(24) 07 மணி முதல் சக்தி TV-யில் நேரடியாக ஔிபரப்பாகின்றது.