அயர்லாந்தை வீழ்த்திய இலங்கை மகளிர் அணி

அயர்லாந்து விஜயத்தை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை மகளிர்

by Rajalingam Thrisanno 12-08-2024 | 11:04 AM

அயர்லாந்து கிரிக்கெட் விஜயத்தை இலங்கை மகளிர் அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

அயர்லாந்துக்கு எதிரான முதல் இருபதுக்கு20 போட்டியை இலங்கை மகளிர் 7 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது.

போட்டியில் இலங்கை சார்பாக அபாரமாக துடுப்பெடுத்தாடி அரைச்சதமடித்த ஹர்சிதா சமரவிக்ரம வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு வழங்கினார்.

டப்லினில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அயர்லாந்து மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்களைப் பெற்றது.

கெபி லூவிஸ் 39 ஓட்டங்களையும் ஒர்லா பிரென்டர்காஸ்ட் 29 ஓட்டங்களையும் அதிகப்சமாகப் பெற்றனர்.

பந்துவீச்சில் இனோஷி பிரியதர்ஷனி 2 விக்கெட்டுகளையும் உதேஷிகா பிரபோதினி, சுகந்திகா குமாரி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

வெற்றி இலக்கான 146 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை மகளிர் அணிக்கு ஹர்சிதா சமரவிக்ரம மற்றும் விஷ்மி குணரத்ன ஜோடி சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தது.

10 ஓவர்களை எதிர்கொண்ட இவர்கள் 83 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

விஷ்மி குணரத்ன 34 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பௌண்டரிகளுடன் 30 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய கவிசா தில்ஹாரி 9 ஓட்டங்களுடனும் அணித்தலைவி அனுஷ்கா சஞ்சீவனி 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

எனினும், தனி ஒருவராகப் பிரகாசித்த ஹர்சிதா சமரவிக்ரம 45 பந்துகளில் ஒரு சிக்ஸர், 15 பௌண்டரிகளுடன் 86 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று வெற்றியை உறுதிசெய்ததுடன் போட்டியின் சிறந்த வீராங்கனை விருதையும் தன்வசப்படுத்தினார்.

இலங்கை மகளிர் அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு வெற்றியை அடைந்து.

இந்த வெற்றிக்கு அமைவாக 2 போட்டகள் கொண்ட இந்த இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரில் இலங்கை மகளிர் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான இருபதுக்கு20 போட்டி நாளை நடைபெறவுள்ளதுடம் குறிப்பிடத்தக்கது.