Colombo (News 1st) 27 வருடங்களின் பின்னர் இந்தியாவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது.
இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 110 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் சரித் அசலங்க முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
பெத்தும் நிஸ்ஸங்க மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் முதல் விக்கெட்டில் 89 ஓட்டங்களை பகிர்ந்தனர்.
குசல் மென்டிஸ் 59 ஓட்டங்களை பெற்றார்.
இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 248 ஓட்டங்களை பெற்றது.
வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா, 71 ஓட்டங்களை பெறுவதற்குள் முதல் 4 விக்கெட்களை இழந்தது.
அணித்தலைவர் ரோஹித் சர்மா 35 ஓட்டங்களை பெற்றார்.
விராட் கோஹ்லி 20 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
துலித் வெல்லாலகேயின் அபார பந்துவீச்சுக்கு மத்தியில் இந்திய துடுப்பாட்ட வீரர்களால் பிரகாசிக்க முடியவில்லை.
மத்திய வரிசையில் வொஷிங்டன் சுந்தர் 30 ஓட்டங்களை பெற்றார்.
சகலதுறை வீரர் துலித் வெல்லாலகே 27 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
ஜெப்ரி வன்டர்சே மற்றும் மஹீஷ் தீக்சன ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இந்தியா 26.1 ஓவரில் 138 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் தொடரின் நாயகனாக துலித் வெல்லாலகே தெரிவாகினர்.