Colombo (News 1st) இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்களில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 240 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் கமிந்து மென்டிஸ் மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் தலா 40 ஓட்டங்களைப் பெற்றதுடன் துனித் வெல்லாலகே 39 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்திய அணி சார்பில் வொஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
241 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா சார்பில் அணித் தலைவர் ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் 97 ஓட்டங்களை பகிர்ந்தனர்.
ரோஹித் ஷர்மா 64 ஓட்டங்களை பெற்றார்.
அக்ஷர் பட்டேல் 44 ஓட்டங்களை பெற்றதுடன் ஏனைய துடுப்பாட்ட வீரர்களால் பிரகாசிக்க முடியவில்லை.
இந்திய அணி 42.2 ஓவர்களில் 208 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது.