பதில் பொலிஸ் மாஅதிபரை நியமிக்க முடியாது - பிரதமர்

பொலிஸ் மாஅதிபர் விவகாரம் - பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர், சபாநாயகர் கருத்தாடல்

by Rajalingam Thrisanno 26-07-2024 | 12:01 PM

பொலிஸ் மாஅதிபர் பதவி வெற்றிடமாக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதியினால் பதில் பொலிஸ் மாஅதிபரை நியமிக்க முடியாது எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் இன்று(26) தெரிவித்தார்.

பொலிஸ் மாஅதிபரின் பதவி தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை குறித்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே பிரதமர் இதனை கூறினார்.

தற்போதைய பொலிஸ் மாஅதிபரை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை வழங்கியுள்ள அங்கீகாரத்தை நீதிமன்றத்தினால் மாற்றியமைக்க முடியாது எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

தற்போதைய பொலிஸ் மாஅதிபருக்கு உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால தடையுத்தரவுக்கு எந்தவொரு சட்ட அடிப்படையும் இல்லை எனவும் பிரதமர் தனது விசேட உரையில் சுட்டிக்காட்டினார்.  

இதனால் குறித்த தடையுத்தரவை பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பிரதமர் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமரின் உரைக்கு பாராளுமன்றத்தில் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பொலிஸ் மாஅதிபர் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடையுத்தரவை ஏற்றுக்கொண்டு அரசியலமைப்புக்கு அமைய  ஜனாதிபதி செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

இதனிடையே பொலிஸ் மாஅதிபரை நியமிக்க எடுக்கப்பட்ட தீர்மானம் சரியான முறையிலும் மனசாட்சிக்கு விரோதமில்லாமலும் எடுக்கப்பட்டதென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிக்கிறார்.

பொலிஸ் மாஅதிபர் பதவியை வெற்றிடமாக்குவதாயின் அதற்கு விசேட நடைமுறைகள் காணப்படுவதாகவும் சபாநாயகர் பாராளுமன்றத்தில் இன்று குறிப்பிட்டார்.

தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலை ஜனாதிபதியினால்கூட தீர்க்க முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் சபாநாயகர் இதன்போது தெரிவித்தார்.

தேவையேற்படின் நீதிமன்றை நாடி இந்தப் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளுமாறும் சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

பொலிஸ் மாஅதிபர் நியமனம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று வாதப்பிரதிவாதங்கள்  இடம்பெற்ற நிலையில் சபாநாயகர் தமது நிலைப்பாட்டை மேற்கண்டவாறு முன்வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.